Sunday 13 October 2013

விஜயநகர சாம்ராஜியதின் முடிவுரை எழுதப்பட்ட ஸ்ரீரங்கம் தீவு!!! (1616 AD)


தோகூர் கிராமம் தற்போதைய தோற்றம் 






விஜயநகர சாம்ராஜியதின் முடிவுரை எழுதப்பட்ட ஸ்ரீரங்கம் தீவு!!! (1616 AD)

இதற்கு முந்தைய பதிவுகளில் சைவ வைணவ போர் (1375 AD) மற்றும் கோவில் அதிகாரியும் அன்று சோழ தேசத்து மகாமண்டல அதிகாரிக்கும் இடையில் நடந்த போட்டியில் , போரிட்டு கொல்லப்பட்ட கோனேரி ராஜ பற்றியும் அறிந்தோம் ( 1495 AD) ..

இன்று மற்றும் ஓர் நூற்றாண்டு கடந்து ஒரு மிகப்பெரிய வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த போர் ஸ்ரீரங்கம் தீவில் நடந்த விசயத்தை பார்க்கப்போகிறோம் ..

இந்த போர் பற்றி அறியும் முன் விஜயநகர சாம்ராஜ்யத்தை பற்றி நாம் சிறிது அறியவேண்டும் ...

தென் இந்தியாவை, முக்கியமாக தமிழகத்தை  முகமதியர்கள் ஆளுகைக்குள் வராமல் மற்றும் நமது கலாச்சார சின்னங்களை அழிக்கப்படாமல் 1371 AD  முதல் காத்து வந்தமைக்கு இவர்கள் ஆளுமையே காரணம் ..தமிழகம் பெரும்பாலும் இவர்களாலும் நாயக்க அரசர்களாலும் காக்கபட்டதற்கு விஜயநகர் பேரரசே அஸ்திவாரம். (ஆனால் 1600 AD பிறகு இவர்கள் நகரங்களை பீஜப்பூர் சுல்தான்கள் கொள்ளை கொண்டு அழித்தவற்றை இன்றும் நாம் காண முடிகிறது ஹம்பியில் )

    நமது தமிழகத்தை  நாயக்ககர்கள் 1734 AD வரை ஆண்டு வந்தனர்.  டெக்கான் பகுதியில் சுல்தான்கள் விஜய நகர தலைமை மாகாணங்களை அழித்து ஒழித்தனர் .(விஜயநகர அரசர்கள் அப்போது தமிழகத்தில் வேலூர் கோட்டையை உண்டாக்கி இங்கே தங்கி விட்டனர் .

     தமிழகத்தை ஆண்ட  நவாப் ஆட்சி காலத்தில் பெரும் பாலும் அவர்கள் இந்துக்களை கணக்கு வழக்குக்கு நம்பி இருந்தது தெரிகிறது ...எனவே நமது பகுதியில் பெரும் இடிப்புகள்  ஏற்படவில்லை ஆனால் நிறைய கோவில் நகைகள் கொள்ளை போயின 


   இந்த விஜயநகர அரசனாக 1600 Ad வேங்கடபதி தேவராயன்  ..தனது சகோதரன் மகன் ஸ்ரீரங்க சிக்க ராய என்பவனை அரசன் ஆக்கினான் .. வேங்கடபதி மனைவியின் சகோதரன் ஜக்கராயன் ,இதில் கோபம் கொண்டு ஸ்ரீரங்க சிக்க ராயனை சிறை பிடித்து ஆட்சியை கை பற்றினினான்!!

அரசனுக்கு வேண்டிய அதிகாரிகள் இதனால் சிறையில் இருக்குந்த ஸ்ரீரங்க சிக்க ராயன் இளைய மகன் ஸ்ரீராமன் என்கிற சிறுவனை   வண்ணான் கூடையில் வைத்து சிறையில் இருந்து வெளியில் கொண்டு வந்தனர் ..
விசயம் அறிந்த ஜக்கராயன் அரசன் சிக்க தேவராயன் அவன் மனைவி பதினேழு வயது மூத்த மகன் அனைவரையும் தன் வாளால் வெட்டிக் கொன்றான்!!

அப்போது தமிழகத்தை இரு வேறு நாயக்க குடும்பங்கள் ஆண்டு வந்தன ..தஞ்சை மற்றும் மதுரை நாயக்ககர்கள்.. (வழக்கம் போல் விரோதிகள் !!)

தஞ்சை நாயக்கனாக அப்போது இருந்தவன் மிக மிக புகழ் வாய்ந்த இரகுநாத நாயக்கன். இவனது கீர்த்திகளை பற்றி பல தெலுங்கு பாடல்கள் தஞ்சை சரஸ்வதி மஹாலில் தற்போது கிடைக்கிறது  .. சிறையில் இருந்து கடத்திவரப்பட்ட இளவரசன் ஸ்ரீராமனை  விஜய நகர தளபதி யச்சமநாயக்கர் ..தஞ்சை அரசனான இரகுநாத நாயக்கனிடம் ஒப்படைத்து கும்பகோணத்தில் விஜயநகர பேரரசனாக மூடி சூட்ட வைத்தனர் .அதை போற்றும் விதமாகவே  கும்பகோணத்தில் தஞ்சை அரசன் இரகுநாதநாயக்கன்  இராம பட்டாபிஷேக கோலத்தில் அமைந்த இராமசுவாமி கோவிலை கும்பகோணத்தில் அமைத்தான் ...

ஜக்கராயன், மதுரை நாயக்கர் துணையுடன் ஸ்ரீரங்கத்தில் தங்கி தஞ்சையை தாக்க திட்டமிட்டு இருந்தான் .. இந்த செய்தி இலங்கையில் போரில் வெற்றி கொண்டு அங்கு முகாம் இட்டு இருந்த தஞ்சை அரசன் இரகுநாத நாயக்கனுக்கு தகவல் பெறப்பட்டு ஸ்ரீரங்கம் நோக்கி வந்தான் ...இதனை தடுக்க கல்லணை அணையை விஜயநகர படைகள் இடித்து விட்டு தஞ்சாவூர் பெரும் பகுதி வெள்ளத்தில் ஆழித்தின






தோகூர் எனப்படும் ஊர் இப்போது கல்லணையின் ஒரு பகுதியாக உள்ள ஒரு சிறு ஊர் .. மேல் காணும் படத்தில் இரண்டு செல் போன் டவர் உள்ள ஊரே அது ..!! தற்போது திருச்சி செல்லும் சாலை மேல்  ஒரு ஐயனார் கோவில் ஒரு பழமையான ஒரு பெருமாள் கோவில் உள்ளது .. தற்சமயம் பெருவாரியான மக்கள் கிருஷ்துவர்களாக இருக்கிறார்கள் .



இரண்டு படைகளும் தற்போதைய கல்லணை பகுதியில் பெரும் சண்டையில் இடுபட்டன.. (
portugies missioniery Barradas , என்போர் இந்த சண்டையை பற்றி குறிப்பிடும் போது இது இந்தியாவில் நடந்த மிக அதிக மக்கள் ஈடு பட்ட போர் (சுமார் பத்து லக்ஷம் பேர்) இது போல் இதற்க்கு முன்  நடந்ததில்லை என்று எழுதியுள்ளார் ...

இந்த போரில் ஜக்கராயன்  படைகள் தோல்வியுற்றன... இவ்வாறாக விஜயநகர சாம்ராஜ்யம் ஸ்ரீரங்கத்தில் கீழ் புற எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் கரையில் காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் முடிவுற்றது ...


இந்த போருக்கு பின் நாயக்க மன்னர்கள் தனி உரிமை பெற்று தமிழகத்தை ஆண்டனர் (முதல் கப்பம் கட்டாத நாயக்கன் நமது திருமலை நாயக்கன் !!) ..இந்த போர் முடிவில் தான் மதுரை நாயக்கர்கள் திருச்சியை தலைநகராக கொண்டனர் (1520 AD)

.பிரான்சிஸ் டே அப்போது சிறு குறுநில மன்னாக இருந்த விஜயநகர் அரசன் ஸ்ரீராமனுக்கு (தோகூர் போருக்கு காரணமான சிறுவன்)  பிறகு பட்டத்துக்கு வந்த பேட வேங்கட ராயாவிடம்  எழுதி வாங்கிய ஒரு கடல் கரையோர நிலம் தான் ஜெயலலிதா தற்போது அமர்ந்து ஆட்சி புரியும் புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George) என்பதை அனைவரும் அறிவோம்  !!

இது நடந்த நாள்.. நள ஆண்டு ஆஷாட மாதம் வளர்பிறை பஞ்சமி திதியுடன் சூரியன் பூசத்திலுள்ள நாள் (மகம் ) 1616 AD june 9th Sunday..





Wednesday 9 October 2013

மத்திய மாநில அரசு சண்டை 1490 AD

மத்திய மாநில அரசு சண்டை 1490 AD

(இது இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் தாண்டி .. முந்தைய பதிவில் இருந்து )

தற்காலத்தில் மத்தியில் ஒரு கட்சி மற்றும் மாநிலத்தில் ஒரு கட்சி ஆட்சி புரிந்தால் ஏற்படும் சண்டை ..மாநில ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலைமை அறிந்ததே ...  இதே மன்னர் ஆட்சி காலத்தில் நடந்தது என்றால்!!


மாலிக்காபூர் படை எடுப்பின் பின் திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம்  சுமார் 50 ஆண்டுகள் பாழ் பட்டே கிடந்தது பின்னர்
1371 AD (ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் அந்த வருடம்தான் ஸ்ரீரங்கம் திரும்பினார், சுமார் 70,000  படை வீர்களுடன் .. அதனாலே அவர் "ரெங்கராஜா" என அழைக்கப்படுகிறார் !!


வீரகம்பன்ன உடையார் (விஜயநகர் பேரரசு )மதுரை சூல்தான்களை வென்று தமிழகத்தை நேர் படுத்தினார். இவர் காலத்தில் தமிழகத்தை “மஹா மண்டலேஸ்வரர்கள்
என்கிற பெயரில் அந்ததந்த பகுதி அரசர்கள் விஜய நகர அரசுக்கு கப்பம் கட்டி ஆண்டு வந்தனர்கள் ..(state governments) இவ்வழி வந்தவர்களே மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்கள்

இதில் விஜயநகர பேரரசு .. பல வித குடும்பத்தினாரால் ஆளப்பட்டது ..

திருச்சி பகுதியை "கோனேரிராயன்" என்போன் மகாமண்டலேஸ்வரனாக ஆண்டு வந்தான் ..இவன் சங்கமகுல விஜயநகர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆண்டு வந்தார்.. (Sangama Dynasty 1336- 1485)



1486 AD ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சாளுவநரசிம்மன் என்போன் விஜயநகர் ராஜவானான் .. இவனின் மூத்த சகோதரர்  “ராமராஜ” என்போன் சன்யாசி கோலம் கொண்டு கந்தாடை ராமானுஜ முனி பெயருடன் ஸ்ரீரங்கத்தில் (தனது தம்பி விஜயநகர அரச அனுமதியுடன் ) பல கையங்கரியங்கள் செய்தது வந்தார் ..( Saluva Dynasty 1485- 1491)

 இவர்தான் வைணவ கோவில்களில் பிராமணர் பிடியில் இருந்து விடுவித்து சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் ஏற்றமும் மரியாதையும் பெற்றுத் தந்தவர் ..

மேலும் எண்ணற்ற  திருப்பணிகளும் செய்தனர் ..!! இவர் வாழ்க்கை வரலாறு ஆராயப்பட வேண்டிய சரித்திர கட்டாயம் !!

இவர் வாழ்ந்த வீடு இன்றும் ஸ்ரீரங்கம் தெற்கு உத்திரவீதியில் உள்ளது ..



மகாமண்டேஷ்வரன் கோனேரிராயன்.. சோழதேச நிர்வாகி .. அவனின் எதிரி
(chaluva dynasty) மத்திய அரசனின் அண்ணன் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகி !! 


ஸ்ரீரங்கம் கோவில் நிலங்கள் பல பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டன .. அதில் வரும் வருமானம் கோவிலுக்கு கிடைக்கவில்லை .. வழக்கம் போல் அரசியல் தான் .எல்லா விதத்திலும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகிக்கு தொல்லை .. தரப்பட்டது ..


இதில் சைவ வைணவ போர் என்று கொள்ள முடியவில்லை காரணம் .. கோனேரிராயன் சாசனம் மற்றும் பல கல்வெட்டுக்களும் அவன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொக்கப்பனை கார்த்திக்கை கோபுர வாசல் கதவுகள் செய்து கொடுத்த கல்வெட்டு உள்ளது , அந்த கதவுகளை  நாம் அனைவரும்
2005 வரை பார்த்து இருப்போம் .. தற்போது அது கோவில் விறகாக பயன்படுத்தப்பட்டு விட்டது ஆம் 1492 AD செய்த ஒரு பொருள் இந்தியாவில் அழிய வேண்டியதே !! பழமையை பற்றி நாம் கவலைப்பட  தேவை இல்லை என்பதால் !!!

உண்டியல் காசும் வருமானம் மட்டுமே  குறியாக உள்ள அரசு அதிகாரிக்கு சரித்திரம் பற்றிய விசாரம் எதற்கு .. அதுவும் இடத்தை அடைத்துக்கொண்டு !!

கோனேரிராயன் பரீதாபி ஆண்டு ஆவணி 26 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
1492 AD ..கதவுகள் இட்டு .. இரண்டு கிராமங்களை தானமாக குடுத்தது பற்றிய கல்வெட்டு கார்த்திகை கோபுர வாசல் உள் கீழ் புறம்.





இந்த இருவர் பிரச்சனையில் இரண்டு ஜீயர்கள் மற்றும் வேறு இரண்டு நபர்கள் வெள்ளை கோபுரம் மற்றும் தற்போதைய ராஜா கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை புரிந்தனர்!!

இந்த விசயத்தை தனது சகோதரன் சாளுவநரசிம்மன் தளபதி நரசநாயக்கனுக்கு (அப்போது அவன்தான் அரசாண்டு வந்தான் சாளுவநரசிம்மன்(1491AD) இறந்து போய் இருந்தான் அவன் மகன்கள் சிறுவர்கள் )   கடிதம் எழுதி வரவழைத்து, கொனேரிராயனை போரில் வென்று .. கொன்று ... தனது ஆளுமையை நிலை நாட்டினார் .

.கோனேரி ராயன் ஒரு விதத்தில் சோழ ராஜனாக சொல்லப்படுகிறான் .. எனவே இவனது மரணம் தமிழ் அரச வம்சத்தின் கடைசி அரசனாக  கொள்ளலாம் .. (இவன் சாசனங்கள் தமிழில் உள்ளது குறிப்பிடத்தக்கது )

மத்திய அரசை எதிர்த்த மாநில அரசு கவிழ்த்தது .. பின்னர் சாளுவ சாம்ராஜ்யம் நரச நாயக்கனால் கைபற்றபட்டு துளுவ
(Tuluva Dynasty)
ஆரம்பிக்கப்பட்டது






வெள்ளை கோபுர உட்புறம் அழகிய மணவாள தாசர் மற்றும் இரண்டு ஜீயர்கள் நிலைக்கால்களில்  சிலை ரூபமாக...


  அழகியமணவாளதாசர் ..


இவர் சிலை மேல் உள்ள கல்வெட்டு :- 
கீழ கோபுர வாசலில் ஸ்ரீ சௌமிய வருஷம் தைமாதம் இருபதாம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு படித்தனம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம் பன்னுகையில் பொறுக்க மாட்டாதேயிந்த திருகோபுரத்திலேறி விழுந்து இறந்த காலமெடுத்த அழகியமணவாளதாசன் ஸ்ரீகாரியம் பெரியாழ்வார் ....





மேலும் வெள்ளை கோபுரம் மேல் இருந்து வீழ்ந்து உயிர் துறந்த ஜீயர்கள் 







 ராஜகோபுரம் கீழ் புர சுவற்றில் அப்பவையங்கார் திருவுருவ சிலையை வெட்டு வைத்தும் கீழ் கண்ட வாக்கியத்தை பதிவு செய்தார்  கந்தாடை ராமானுஜ முனி!!!!..

தெற்கு தற்போதைய ராஜா கோபுரம் மொட்டையாக இருக்கையில் அதில் இருந்து வீழ்ந்து உயிர் துறந்த அப்பாவய்யங்கார் திருவுருவம் ஒரு காலத்தில் இவருக்கு திருவரசு அமைத்து வழி பட்டு இருக்ககூடும் அதனால் சிறு துளைகள் உள்ளன .. இன்று வழக்கம் போல் இவர்களை மறந்து விட்டோம் ..




இவர் சிலை மேல் உள்ள கல்வெட்டு :- 

சுபமஸ்த்து சௌமிய வருஷம் தை மாதம் நாலாம் தேதி வெள்ளிக்கிழமை நாள் ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு படித்தனம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம் பண்ணுகையில் குடுக்க மாட்டாதே இந்த திருக்கொபுரத்தில் ஏறி விழுந்து இறந்தகாலம் எடுத்த அழகியமணவாளதாசன் ஸ்ரீகாரியம் அப்பாவய்யங்கார். இவருக்கு சுவாமி யேக்காளகள் திருத்தேர்புறப்பாட்டு முதலான அதிகவரிசை பிரசாதித்தருளி பிரம்மமேத சம்ஸ்காரம் பண்ணிவித் தருளி முழுபடித்தனம் கொண்ட ருளினார். யிப்படி நடந்த இந்த முழு படித்தனத்துக்கு விரோதம் பண்ணியவன் ரெங்கத் துரோகியாய் போகக் கடவன் அனுகூலம் பண்ணியவன் ஸ்ரீலட்சுமி பரிபூர்ண கடாக்ஷ பாக்யஸ்தனா  இருக்கக் கடவான்

இனிமேல் நமது திருவரங்கதிற்காக உயிர் துறந்த இம் மாமனிதர்களை அந்த இடத்தை கடந்து செல்லும் போது ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு செல்லுங்கள் !!















Tuesday 1 October 2013

திருவரங்க திருவானைக்கா போர் (1375 AD)

திருவரங்கத்தின்  பிரதான வாயில் (1398AD)
தற்போதைய வெங்கடேஸ்வர மருத்துவமனை பின்புறம் 


திருவரங்க திருவானைக்கா  போர்

இன்றைக்கு ஒரே ஊராக இருக்கும் திருவரங்கமும் திருவானைக்காவும் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டி இருந்தனர் என்பது அதிசயமே...

முகமதியர் படை எடுப்பின் பின்
1371 திருவரங்கத்து அரங்கன் (நம்பெருமாள்) திருவரங்கம் திரும்பிய பின் .

பங்குனி மாதம் நடைபெறும் சில உத்சவங்களின் போது திருவானைக்கா கோவில் உள் சென்று அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதியில் சேவை சாதித்து இளநீர் அமுது செய்து தற்போது கோவில் நுழை வாயில் அருகில் தென் புறம இருக்கும் ஜம்புதீர்த்தத்தில் திருவடிவிளக்கி, அங்கே இருக்கும் மண்டபத்தில் சேவை சாதித்து விட்டு எல்லக்கரை மண்டபம் செல்வது வழக்கம்!!

சுமார் 70 ஆண்டுகள்
(1322 - 1371 AD) வரை அரங்கன் ஸ்ரீரங்கத்தில் இல்லை .. பின்னர் ஒரு மூன்று ஆண்டுகள் (1375AD பெரும் சண்டை ஏற்ப்பட்டு ஸ்ரீரங்கம் கோவில் ஒன்பதாம்  ஜீயர் கொல்லப்பட்டார் )  இவர்கள் பழைய படி திருவானைக் கா கோவில் உள் பெருமாளை எடுத்து சென்ற போது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழிந்து போய் இருந்திருக்கிறது .. அப்போது வாழ்ந்த மக்கள் இந்த பழைய வழக்கத்தை நிச்சயமாக ஒரு திணிப்பாகவே எதிர்கொண்டு இருப்பது புரிகிறது ..

இந்த பெருமாள் வருகையை அன்றைய திருவானைக்கா சைவர்கள் மிக கடுமையா எதிர்த்தானர் .. பெருமாள் வருகின்ற அன்றைய தினம் திருவீதிகளில் வசிப்பவர் எவராகினும் தற்கொலை செய்தது கொள்ளுதல் போன்று பல விபரீத விசயங்கள் நடைபெற்றன ..(எவராகினும் இறந்தால் அந்த வீதியில் இறை உத்சவங்கள் நடைபெறுவதில்லை) இந்த தகராறுகள் கை கலப்பாக மாறி இரு ஊரை சேர்ந்த பலர் மரித்தும் போயினர்!! இதில் பலியானவர்கள் ஸ்ரீரங்கத்தில் ஒன்பதாம் பட்டத்து பராங்குச ஜீயர் மற்றும் பலரும், வேல்ஏந்திய தாசர் என்போரும் அடக்கம்.

ஸ்ரீரங்கம் கோவில் பத்தாவது ஜீயர் ஆழகியமணவாளர் மற்றும் உத்தம நம்பி இருவரும் விஜயநகர் அரசனிடம் சென்று இது பற்றி முறையிட்டு வந்தனர் .

1375 AD  விஜயநகர் அரசன் ஒரு சமாதான குழுவை  ரெண்டு ஊருக்கும் மத்தீஸ்தம் செய்ய அனுப்பினான்.

இதில் . குருவியாச உடையார்,(இவர் அன்றைய விஜயநகர் அரசன் புக்க உடையார் மந்திரி ) கோபால உடையார் , ரகு உடையார் , திருவரங்கத்தி சேர்ந்த உத்தமநம்பி திருவானைக்காவை சேர்ந்த சைவர்கள், அமர்ந்து பேசி, எல்லையை நிர்ணயம் செய்ய பெரியவர் உத்தமநம்பியை கண்களை கட்டி ஓடி செல்லும் பாதையே இருவருக்கும் எல்லைக் கோடு என்று முடிவானது ..

இதில் உத்தமநம்பி என்பது ஒரு குடும்ப பெயர் ..இவர்கள் திருச்சி பகுதியில் அனைத்து நிலங்களையும் நிர்வாகம் செய்தது எல்லா கோவில்களுக்கும் அதை பகிர்ந்து குடுத்து வந்துள்ளனர் (இவர்கள் வைணவர்கள் ) இன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டம் என்பது இவர்களால் உருவாக்கப்பட்டதே ...

இவர்கள் குடும்பம் திருச்சி பகுதியை 1100 AD முதல் 1800 AD வரை மூன்றாம் குலோத்துங்கன் காலம் முதல் ஆற்காடு நாவப் காலம் தாண்டி ஆங்கிலேயர்
1800 AD இல் கலெக்டர் அறிவிக்கும் வரை யார்  ஆண்டாலும் நிர்வாகம் பண்ணி வந்து உள்ளனர் !

 இவர்கள் தான் தமிழக சரித்திரத்தில், எல்லா கல்வெட்டுகளிலும்  ஒரு 1000 ஆண்டுகளாக காணப்படுகிறார்கள் .. (கொடுமை.. பாட புத்தகங்களில் இல்லை!!) இவர்கள் வம்சத்தினர்  இன்னும் ஸ்ரீரங்கத்தில் அமைதியாக அரங்கனின் மரியாதை பெற்றுகொண்டு  வாழ்கிறார்கள் (
இதை பற்றி பின் ஒருமுறை பார்ப்போம்..)

அன்று தென் காவேரியில் இருந்து வட புறம் கொள்ளிடம் வரை இவர் ஓடிய பாதை ஸ்ரீரங்கம் திருவானைக்கா இரண்டு ஊர்களுக்கும் எல்லையாக அமைந்தது. இவர் பெயர் கிருஷ்ணராய உத்தமநம்பி.

இவர் இரு ஊர்களுக்கும் இடையே ஒரு பேரு மதில் கட்டிவைத்து பல மண்டபங்களையும் கட்டி வைத்தார் ..அதில் இப்போது எஞ்சி இருப்பது ஒரு நுழைவாயில் மற்றும் திருவானைக்கோவில் “ஜம்புகேஸ்வர நகர்” அருகில் (நான் இந்த சுவற்றின் சுவடுகளை 1988 பார்த்து இருக்கிறேன்!!) தற்போது சில கற்கள் மட்டுமே விஞ்சி இருக்கின்றன !!


இங்கு படத்தில் காணும் கற்கள் அந்த சுவற்றின் மிச்சமே !!

இதை தெரிவிக்கும் ஒரு தமிழ் பாடல் இன்றும் அரங்கன் முன் பாடப்பட்டு வருகிறது ..

“மல்லை நிலையிட்ட தோளரங்கேசர்  மதிளாள் பட்ட
எல்லை நிலையிட்ட வார்த்தையும் போலல்ல – நீதிதன்னால்
சொல்லை நிலையிட்ட உத்தநம்பி குலம் தழைக்க
எல்லை நிலையிட்ட வார்த்தை எல்லோருக்கு எட்டெழுத்தே “


இவர் உருவாக்கிய எல்லைக் கோடு தற்போதைய ஸ்ரீனிவாச நகர் முதல் தெருவில் அமைந்தது ...இந்த தெருவில் தற்போது இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியே அன்று ஒரு பதினாறு கால் மண்டபம் இருந்த இடம் என்று வரலாற்று ஆசிரியர் வைஷ்ணவ ஸ்ரீ அவர்கள் எழுதி இருக்கிறார் ..


திருவரங்கத்தின் பிரதான வாயிலின் தற்போதைய அவல நிலை !!!



தெலுங்கு எழுத்துக்கள் கொண்ட ஒரு கல்வெட்டு ...விஜயநகர் காலத்தினாக இருக்க வெண்டும் ...



அழகிய வடிவுடன் கூடிய கிருஷ்ணர் .....



வலது புறம் நரசிம்ஹர் ..
 .